பாளையங்கோட்டை சிறையில் பயங்கர மோதல்: வாலிபரை அடித்துக்கொன்ற 7 கைதிகள் மீது வழக்கு
பாளையங்கோட்டையில் கைதிகள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளம் நடு தெருவை சேர்ந்தவர் பாவநாசம். இவருடைய மகன் முத்து மனோ (வயது 27). இவர் சமீபத்தில் களக்காடு பகுதியில் காதல் தகராறில் பிளஸ்-2 மாணவர் ஒருவரை அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து முத்து மனோ உள்ளிட்டவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர். விசாரணை கைதியான முத்து மனோ உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் முத்து மனோ உள்ளிட்டவர்களை நேற்று முன்தினம் நாங்குநேரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே, ஸ்ரீவைகுண்டம் சிறையில் முத்து மனோவுக்கும், மற்றொரு கைதிக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை இருந்ததால், முத்து மனோவை கூட்டாளிகளுடன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.பின்னர், முத்துமனோ மற்றும் அவரது கூட்டாளிகள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு சிறைக்கு வந்த சிறிதுநேரத்தில் முத்து மனோவை சில கைதிகள் சேர்ந்து தாக்கினர். இதனை தடுக்க முயன்ற முத்து மனோவின் கூட்டாளிகளான அருள் துரைசிங், மாதவன், சந்திரசேகர் ஆகியோரும் தாக்கப்பட்டனர். இதனால் சிறை வளாகத்தில் கைதிகளுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து சிறை காவலர்கள் லேசான தடியடி நடத்தி கைதிகளை விரட்டியடித்து அறைகளில் அடைத்தனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த முத்து மனோவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி முத்து மனோ பரிதாபமாக இறந்தார். கைதிகள் தாக்கியதில் காயம் அடைந்த அருள் துரைசிங், மாதவன், சந்திரசேகர் ஆகிய 3 பேரும் மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய சிறைச்சாலை சார்பில் அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன், மகேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், முன்விரோதம் காரணமாக கைதிகள் சேர்ந்து முத்து மனோவை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள நெல்லை வடக்கு தாைழயூத்தைச் சேர்ந்த ஜேக்கப், ராமமூர்த்தி, மேல குளத்தைச் சேர்ந்த மகாராஜன் என்ற ஏ.டி.எம்., பல்லிக்கோட்டையை சேர்ந்த மாடசாமி என்ற மகேஷ், தாழையூத்தைச் சேர்ந்த சந்தனமாரி முத்து என்ற கொக்கி குமார் (22), ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த கண்ணன் என்ற கந்தசாமி, திருக்குறுங்குடியை சேர்ந்த அருண்குமார் ஆகிய 7 பேர் மீது பெருமாள்புரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
சிறையில் கைதி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, நெல்லை முதலாவது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு பாபு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மத்திய சிறை வளாகம், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கும் சென்று விசாரணை மேற்கொண்டார். சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த சிறை காவலர்கள் மற்றும் கைதிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்து மனோ கொலை செய்யப்பட்டதால், அவருடைய உறவினர்கள், ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.