காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கொரோனா உறுதி
காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கொரோனா உறுதியானதால் பயோ டெக்னாலஜி துறை தற்காலிகமாக மூடப்பட்டது.
மதுரை, ஏப்.24
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பயோ டெக்னாலஜி துறையின் பேராசிரியர் ஒருவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. அதனை தொடர்ந்து, அவர் கடந்த 3 நாட்களாக பல்கலைக்கழகத்துக்கு வரவில்லை. இதற்கிடையே, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அந்த துறையில் அனைத்து அறைகளுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், பயோடெக்னாலஜி துறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அந்த துறையில் பேராசிரியருடன் எவரும் தொடர்பில் இல்லை என்று பல்கலைக்கழக வட்டாரத்தில் கூறப்படுகிறது. வருகிற திங்கட்கிழமை வழக்கம்போல இந்த துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என்று கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் பிற துறை பேராசிரியர்கள், பல்கலைக்கழக குடியிருப்பில் வசித்து வரும் பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அரசு வழிகாட்டுதலின்படி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.