பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்ட விழாவில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி
பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்ட விழாவில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்ட விழாவில் தகராறில் ஈடுபட்ட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி நடைபெற்றது. தேரோட்ட நாளில் தேர் நன்செய் இடையார் சாலையில் சென்றபோது முன்விரோதம் காரணமாக ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மற்றொரு சமூகத்தினர் பரமத்திவேலூரில் திருவள்ளுவர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாத அவர்கள் பின்னர் பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 பேர் கைது
பின்னர் நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமு, பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையில் பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், பரமத்தி இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தேரோட்ட விழாவில் ஏற்பட்ட தகராறில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். தகராறில் ஈடுபட்டதாக பரமத்திவேலூர் கிழக்கு தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் ஜெயபிரகாஷ் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த முருகன் (45), முனியப்பன் (52), மற்றொரு முருகன் (42), ராஜ்குமார் (21) மற்றும் படமுடிபாளையம் பகுதியை சேர்ந்த சேது என்ற சேதுபதி (35) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
=========