கறிக்கோழி இறப்பு விகிதத்தை குறைப்பது எப்படி கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அறிவுரை

கோடைகாலத்தில் கறிக்கோழி இறப்பு விகிதத்தை குறைப்பது எப்படி? என்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Update: 2021-04-23 17:58 GMT
பொள்ளாச்சி

கோடைகாலத்தில் கறிக்கோழி இறப்பு விகிதத்தை குறைப்பது எப்படி? என்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

கோடைகாலம் 

கோடைகால தட்ப வெப்பநிலை உயர்வு காரணமாக கறிக்கோழிகள் உடலில் ஏற்படும் மாற்றம் காரணமாக வெப்ப அயர்ச்சி ஏற்படுகின்றன. கறிக்கோழிகள் மிக அதிக வெப்பமான நேரங்களில் உடல் வெப்பநிலை அதிகமாவதால் வெப்பநிலை அதிகரித்து இறப்பு ஏற்படுகிறது. 

கறிகோழிகளுக்கு தேவையான வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை ஆகும். பண்ணையின் வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் மேல் உயரும்போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் வாய் திறந்த நிலையில், இறக்கையை பரப்பி கோழிகள் அமரும்.

வெப்பத்தின் தாக்கம் 

தேவைக்கு அதிகமான வெப்பத்தை வாய்மூலம் மூச்சு விட்டு வெளியேற்றுகிறது. கோழிகளுக்கு வியர்வை சுரப்பி இல்லாததால் அவை வெப்பத்தை தோல் மூலம் வெப்ப கதிர்வீச்சு மாற்றத்தின் மூலம் வெளியேற்றுகிறது. 

வெப்பநிலை அதிகரிக்கும் போது தீவனம் உட்கொள்ளும் அளவு குறைகிறது. சில நேரங்களில் கோழிகள் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே வெப்ப தாக்கத்தை குறைக்க கோடைகாலத்தில் கட்டிடத்தின் கூரையில் மேற்புறத்தையும் பக்கவாட்டு சுவர்களையும் சுண்ணாம்பு கொண்டு வெள்ளை அடிப்பதால் வெப்பத்தின் தாக்கம் குறையும். 

குளுமைப்படுத்த வேண்டும் 

மேலும் கொட்டகையை சுற்றிலும் திறந்த நிலமாக வைக்காமல் புல்வெளி பாதை அமைப்பது நல்லது. கோடையில் கோழிகள் அதிகம் நீர் அருந்தும் என்பதால் குடிநீர் தொட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

குளிர்ந்த சுத்தமான குடிநீர் எப்போதும் கோழிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும். கோழிகளுக்கு உச்சி வெயில் நேரத்தில் தீவனம் அளிக்க கூடாது. கோடைகாலத்தில் வெயில் நேரத்தில் கூரை மீது தண்ணீரை தெளித்து குளுமைப்படுத்த வேண்டும். மேலும் கூரை மீது வைக்கோல் அல்லது உலர்ந்த தட்டைகளை பரப்பி விடலாம்.

உயிரிழப்பை தடுக்கலாம் 

மேலும் கொட்டகையின் மேல்பகுதியல் தண்ணீர் தெளித்து வெயிலின் தாக்கத்தை குறைக்கலாம். இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்தும்போது வெயிலில் இருந்து கோழிகள் உயிரிழப்பை தடுக்கலாம்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்