நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை உள்பட 195 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை உள்பட 195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்து உள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 13,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த இருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,963 ஆக ஆனது.
இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி, அரசு ஆஸ்பத்திரியின் நுண்ணுயிரியல் வல்லுனர் உள்பட 195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,158 ஆக உயர்ந்தது. இதில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது தெரியவந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 95 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
1,313 பேருக்கு சிகிச்சை
இதனிடையே இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 112 பேர் பலியாகி இருந்த நிலையில், 12,733 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 1,313 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் எதிரொலியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.