வேப்பனப்பள்ளி அருகே 1,330 திருக்குறள்களை ஐஸ் குச்சியில் எழுதி 8-ம் வகுப்பு மாணவி சாதனை
வேப்பனப்பள்ளி அருகே 1,330 திருக்குறள்களை ஐஸ் குச்சியில் எழுதி 8-ம் வகுப்பு மாணவி சாதனை படைத்தார்.
வேப்பனப்பள்ளி, ஏப்.24-
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கத்திரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (வயது 13). இவர் நாச்சிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி சிறு வயது முதலே தமிழ் மீது பற்று கொண்டு தமிழ் பாடத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்து வந்துள்ளார். இவர் தமிழ் மீது கொண்டுள்ள ஆர்வத்தை அறிந்த ஆசிரியர்கள் மாணவியை தமிழில் சாதனை படைக்க ஊக்குவித்தனர்.
ஆசிரியர்களின் ஊக்கத்தை தொடர்ந்து மாணவி சாதனை படைக்க திருக்குறளை தேர்வு செய்தார். அதன்படி 1,330 திருக்குறள்களை ஐஸ் குச்சியில் எழுதி சாதனை படைக்க முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக இரவு பகல் பாராமல் மாணவி 1,330 திருக்குறள்களையும் ஐஸ் குச்சியில் 6 நாட்களில் எழுதி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை பாராட்டி ஆசிரியர்கள் மாணவிக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். இதேபோல் இந்த பள்ளி 3-ம் வகுப்பு மாணவன் சிவமணி தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களின் பெயர்களை 3 நிமிடங்களில் வாசித்து சாதனை படைத்து வருகிறார். இந்த மாணவ-மாணவியின் சாதனைகளை விரைவில் சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.