திண்டுக்கல்லில் 11 தெருக்களுக்கு ‘சீல்’ வைப்பு
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததையடுத்து திண்டுக்கல்லில் 11 தெருக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தகரத்தால் அடைத்து ‘சீல்’ வைத்துள்ளனர்.
திண்டுக்கல்:
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததையடுத்து திண்டுக்கல்லில் 11 தெருக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தகரத்தால் அடைத்து ‘சீல்’ வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளை தகரத்தால் அடைத்து ‘சீல்’ வைத்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் இடங்களை மாநகராட்சி அதிகாரிகள் தகரத்தால் அடைத்து ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் நாயக்கர் புதுத்தெரு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, இந்திராகாந்திநகர் உள்ளிட்ட 4 தெருக்களை சேர்ந்த 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த தெருக்களை தகரத்தால் அடைத்து மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
11 தெருக்களுக்கு ‘சீல்’
இந்தநிலையில் நேற்று மேட்டுப்பட்டி ரோடு, ராஜீவ்காந்தி தெரு, அழகர் தெரு, எம்.டி.எஸ். காலனி ஆகிய தெருக்களில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த தெருக்களும் தகரத்தால் அடைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கூறுகையில், திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள தெருக்கள் தகரத்தால் அடைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரை மொத்தம் 11 தெருக்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த தெருக்களுக்கு வெளிநபர்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.