கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் 2 பேருக்கு கொரோனா

கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-23 14:41 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் கணக்கெடுப்பாளர் மற்றும் வயர்மேனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அந்த அலுவலகத்தில் பணியாற்றும் 107 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் மின் பயன்பாட்டு கணக்கெடுப்பாளர்், வயர்மேன் ஆகியோருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் நேற்றுமுன்தினம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
ஊழியர்களுக்கு பரிசோதனை
இதை தொடர்ந்து கோவில்பட்டி மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா உத்தரவின் பேரில் நேற்று கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் செயற்பொறியாளர் சகர்பான் மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள், உதவியாளர்கள் என, அந்த அலுவலகத்தில் பணியாற்றும் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
இதன் பேரில் நேற்று டாக்டர் மனோஜ் தலைமையில் செவிலியர்கள் லலிதா, மகாலட்சுமி, சுசிலா, முத்துலட்சுமி, லேப் டெக்னீசியன் மகேஸ்வரி ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பணியில் இருந்த மின்வாரிய பொறியாளர்கள் உள்ளிட்ட 107 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுத்துச் சென்றனர்.
பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு
 சோதனை முடிவுகள் இன்று(சனிக்கிழமை) வெளிவரும் என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும், கொரோனா பரிசோதனையை தொடர்ந்து நேற்று பொதுமக்கள் யாரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்