ஒழுகூர் ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
வாலாஜாவை அடுத்த ஒழுகூர் ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.
வாலாஜா
வாலாஜாவை அடுத்த ஒழுகூர் ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.
போலீசுக்கு தகவல்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த ஒழுகூரில் நீர்நிறைந்த ஏரி உள்ளது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் ஏரிக்கரையில் சிறுவர்களின் துணிமணிகள் கிடந்ததைப் பார்த்தனர். ஆனால் அங்கு சிறுவர்களின் நடமாட்டம் இல்லை.
இதுகுறித்து சந்தேகத்தின்பேரில் பொதுமக்கள் வாலாஜா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசார், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, தீயணைப்புப்படை வீரர்களை ஒழுகூர் ஏரிக்கு வரவழைத்தனர்.
பள்ளி மாணவர்கள்
தீயணைப்பு நிலைய அலுவலர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் ஒழுகூர் ஏரிக்கு விரைந்து வந்து, ஏரியில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தப் பகுதியில் போலீசார் விசாரித்தபோது, கவுத்தேரி கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் கிஷோர் (வயது 10) என்றும், அவன் அங்குள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான் என்றும் தெரிய வந்தது. மற்றொரு சிறுவன் அதே கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தியின் மகன் அருண்குமார் (12), அதேபள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான் என்றும் ெதரிய வந்தது.
இருவரும் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்றபோது அவர்களுக்கு நீச்சல் ெதரியாததால் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.