முதன்மை கல்வி அலுவலர் உள்பட 301 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் உள்பட 301 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் உள்பட 301 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குறிப்பாக பொதுமக்கள் கூடும் இடங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று வெளியான முடிவில் ஒரேநாளில் 301 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிறுவர், சிறுமிகளும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைடுயடுத்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 'பி' பிளாக்கில் 3-வது மாடியில் உள்ள அவரது அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் அவரது அலுவலக அறை மூடப்பட்டது. யாரும் வர வேண்டாம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அங்கு பணியாற்றிய மற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக 2-வது மாடியில் பணியாற்றும் ஊழியர்கள் 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அங்கும், கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
வங்கி மூடல்
வேலூர் மண்டித் தெருவில் உள்ள தனியார் வங்கியில் ஊழியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அந்த வங்கியில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தற்காலிகமாக வங்கி மூடப்பட்டது.
இது ஒருபுறமிருக்க வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகள் சுமார் 200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து வெளியூரிலிருந்து கொரோனா நோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
வேலூரில் கொரோனா வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் வழக்கமாக அண்ணாசாலை, காட்பாடி ரோடு, ஆற்காடு சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். தற்போது கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளதால் வாகனங்கள் குறைந்த அளவிலேயே செல்கின்றன.
வெளியூரைச் சேர்ந்தவர்கள் மூலம் வேலூரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே, இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.