தாயாருக்கு சிகிச்சை அளிக்க டாக்டா்கள் மறுப்பதாக வீடியோ
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தாயாருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பதாக கூறி வாலிபர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தாயாருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பதாக கூறி வாலிபர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு ஆஸ்பத்திரி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு பாவேந்திரன் மற்றும் சுரேஷ் என 2 மகன்கள் உள்ளனர். இதில் சுரேஷ் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக முத்துலட்சுமி சேர்க்கப்பட்டார். அங்கு முத்துலட்சுமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாமல் முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து அவருடைய உடல் ஆம்புலன்சு மூலம் தாராபுரம் கொண்டு செல்லப்பட்டது.
வீடியோ வெளியிட்ட வாலிபர்
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை முத்துலட்சுமியின் மகன் சுரேஷ் சமூக வலைதளமான யூ-டியூப்பில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டார். அந்த வீடியோவில் அவரது தாய் உயிரோடு இருப்பதாகவும், டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும், ஆனால் அவர் உயிரோடு இருக்கும்போதே இறந்ததாக சான்று கொடுத்ததாகவும் அந்த வீடியோவில் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட முத்துலட்சுமிக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணமடைந்தார். இருப்பினும் அவர் உடல்நிலை சரியில்லாததால் அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதனால் அவர் இறந்ததாக சான்று கொடுத்து, உடலை கொண்டு செல்லும்படி உறவினர்களிடம் தெரிவித்தோம். ஆனால் நாடித்துடிப்பு இருப்பதாக கூறி வீடியோ சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டுள்ளது. நாடித்துடிப்பு முத்துலட்சுமிக்கு இல்லை.
மன உளைச்சல்
முத்துலட்சுமியின் கையை மற்றவர்கள் பிடிக்கும் போது, அவர்களது நாடித்துடிப்பை பதிவு எந்திரத்தில் வந்ததை தான் அவர்கள் முத்துலட்சுமிக்கு நாடித்துடிப்பு இருப்பதாக தவறாக தெரிவித்துள்ளனர். இதுபோன்று வீடியோ பதிவு செய்து அரசு ஆஸ்பத்திரி குறித்து அவதூறு பரப்புவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. கொரோனா காலத்தில் வீடுகளுக்கு கூட டாக்டர்கள் செல்லாமல் பணி செய்து வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் கடும் சூழ்நிலையிலும் வேலை செய்யும் பலரையும் கவலையடைய செய்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-----------