முககவசம் வாங்கித் தருவதாக ரூ.46 லட்சம் நூதன மோசடி சென்னையில், பெண் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு முககவசங்கள் வாங்கித் தருவதாக கூறி ரூ.46 லட்சம் நூதன மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை,
சென்னை ஆலந்தூரைச் சேர்ந்தவர் நரேஷ் (வயது 29). இவர் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா முதல் அலை நாடு முழுவதும் பரவியபோது, முககவசத்துக்கு பெரிய அளவில் தேவை இருந்தது. அப்போது ஜெர்மனி, டென்மார்க் போன்ற வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு முககவசங்கள் வாங்கித் தரப்படும் என்று ஒரு நிறுவனம் விளம்பரப்படுத்தி இருந்தது.
நானும் அதை உண்மை என்று நம்பி குறிப்பிட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டேன். அவர்களும் குறைந்த விலைக்கு தரமான முககவசங்களை வாங்கித் தருகிறோம் என்றனர்.
அதற்கு முன்கூட்டியே பணம் செலுத்தி புக்கிங் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். 5.5.2020 முதல் 8.5.2020 வரை ரூ.46 லட்சம் வங்கி வாயிலாக குறிப்பிட்ட நிறுவனத்துக்கு செலுத்தினேன்.
ஆனால் அந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முககவசங்கள் வாங்கித் தராமல், ரூ.46 லட்சம் பணத்தையும் மோசடி செய்து விட்டனர். பின்னர் அந்த நிறுவனத்தை மூடி விட்டு மோசடி நபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக மயிலாப்பூர் துணை கமிஷனர் சாம்சன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவான அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.