ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் பயன்பாட்டை குறைக்க புதிய வழிமுறைகள்

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பயன்பாட்டை குறைக்க புதிய வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-23 00:40 GMT
சென்னை, 

கொரோனா நோயாளிகள் பெரும்பாலானோர் மூச்சுத்திணறல் காரணமாக அதிகளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் தேவை மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மத்திய மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. பல அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைகளும் முன்பை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைகளில் இருக்கும் ஆக்சிஜன் டேங்க் நிரப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது, ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் தினசரி லாரிகள் மூலம், ஆக்சிஜன் டேங்க் நிரப்பப்படுகின்றன.

இந்தநிலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பயன்பாட்டை குறைத்து, ஆக்சிஜனை சேமிக்கும் புதிய வழிமுறைகளை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பின்பற்றி வருகிறது. இதுகுறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-

தற்போது ஆக்சிஜன் தேவை அனைத்து மருத்துவமனைகளிலும் அதிகரித்து உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆக்சிஜன் பயன்பாட்டை குறைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதன்படி இங்குள்ள நோயாளிகளை அதிக நேரம் சாய்ந்து உட்கார வைக்கிறோம். அதன் மூலமாக அவர்களுக்கு ஒன்று முதல் 2 சதவீதம் ஆக்சிஜன் கூடுதலாக கிடைக்கிறது. அதேபோல், வயிற்று பகுதி கீழாக இருக்கும் வகையில் குப்புற படுக்க வைக்கிறோம். மூச்சு பயிற்சிகள் அளிக்கிறோம். இதன் மூலமாகவும் செயற்கை முறையில் ஆக்சிஜன் வழங்கப்படாமலே, நோயாளிக்கு 2 சதவீதம் வரை ஆக்சிஜன் கிடைக்கிறது.

இதுதவிர இடைவெளி விட்டு ஆக்சிஜன் செலுத்தும் முறை மூலமாக ஆக்சிஜன் சேமிக்கப்படுகிறது. மேலும், காற்றில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ‘ஆக்சிஜன் கான்சண்ட்ரேட்டர்’ கருவி மூலம் 5 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக திரவ ஆக்சிஜனை சேமித்து வருகிறோம்.

இங்கு 575 படுக்கைகளில் 503 படுக்கைகள் நிரம்பிவிட்டன. அதில் 350 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நாள் ஒன்றுக்கு 2 கிலோ லிட்டர் முதல் 3 கிலோ லிட்டர் வரை மட்டுமே நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது தினசரி 10 கிலோ லிட்டர் வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 24 கி.லி மற்றும் 10 கி.லி கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் டேங்க் உள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க, அவை தினசரி ஒன்று அல்லது 2 லாரிகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

மேலும், ஆக்சிஜனை கையாளுவதற்காக மயக்கவியல் துறை தலைவர் மற்றும் ‘டீன்’ தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு தினமும் ஆக்சிஜன் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்