ஓமலூர் அருகே குரமச்சிகரடு தடுப்பணையில் மனித எலும்பு கூடு

தடுப்பணையில் மனித எலும்பு கூடு

Update: 2021-04-22 22:33 GMT
ஓமலூர்:
ஓமலூர் அருகே குரமச்சிகரடு தடுப்பணையில் மனித எலும்பு கூடு கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தடுப்பணை
ஓமலூர் அருகே சக்கர செட்டிபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஏற்காடு மலை அடிவார வனப்பகுதியில் குரமச்சிகரடு என்ற இடத்தில் தடுப்பணை உள்ளது. அந்த தடுப்பணை ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வரும் கிழக்கு சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. தற்போது தடுப்பணை வறண்டு தண்ணீர் இன்றி காணப்படுகிறது.
இந்த நிலையில் தடுப்பணை பகுதிக்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள் அங்கு சேற்றில் மனித எலும்புக்கூடு இருப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து வனத்துறையினர் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 
விசாரணை
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஓமலூர் போலீசார் விரைந்து சென்று அங்கு கிடந்த எலும்பு கூட்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் தண்ணீர் இருந்தபோதே தடுப்பணையில் குளிக்க வந்தவர்கள் யாராவது மூழ்கி இறந்தார்களா? அல்லது யாரையாவது கொலை செய்து தடுப்பணையில் வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்