கொரோனாவுக்கு முதியவர் பலி

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். புதிதாக 178 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-22 20:31 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 28 ஆயிரத்து 130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 178 பேருக்கு பாதிப்ப உறுதியானது. இவர்களில் டெல்லியில் இருந்து கடலூர் வந்த ஒருவர், சென்னையில் இருந்து அண்ணாகிராமம், புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, நெய்வேலி, கடலூர், கம்மாபுரம், நல்லூர் வந்த 11 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இது தவிர சேலத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி வந்த ஒருவர், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 77 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 84 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 469 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 77 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 311 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் ஒருவர் பலியானார். இதன் விவரம் வருமாறு:-

பலி

விருத்தாசலத்தை சேர்ந்த 60 வயது முதியவர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 312 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதித்த 986 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 464 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 243 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதி நேற்று 50 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்