நாம் தமிழர் பிரமுகரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்

நாம் தமிழர் பிரமுகரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் செய்யப்பட்டது.

Update: 2021-04-22 19:02 GMT
ஆவுடையார்கோவில்
 ஆவுடையார்கோவில் அருகே உள்ள துவாராகாம்பாள் புரத்தைச் சேர்ந்தவர் பரத் (வயது 35). நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக உள்ள இவர் பெருங்காடு கிராமத்தை சேர்ந்த முத்தையா என்பவருக்கு பணம் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. முத்தையாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவருக்கும் பரத்திற்கும் கட்சி கொடி ஏற்றுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முத்தையாவிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்க பரத் சென்றபோது அங்கிருந்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் சிலர் சேர்ந்து பரத்தை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த பரத் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் பரத்தை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் நேற்று முன்தினம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் நேற்று வரை யாரும் கைது செய்யப்படாததால் பெருங்காடு கடைவீதி முன்பு நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் நாளை(சனிக்கிழமை) மாலைக்குள் பரத்தை தாக்கியவர்கள் கைது செய்யப்படுவர் என உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் பெருங்காட்டில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்