இண்டூர் அருகே 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் -அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
இண்டூர் அருகே 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பென்னாகரம்:
இண்டூர் அருகே 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
9-ம் வகுப்பு மாணவி
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி கூலிக்கொட்டாயில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரானா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயிற்சி புத்தகம் வாங்குவதற்கு நேற்றுமுன்தினம் அந்த மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் மல்லியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் (வயது 43) என்பவர் பயிற்சி புத்தகத்தை கொடுத்த போது பள்ளி மாணவியை துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டுக்கு திரும்பிய மாணவி பெற்றோரிடம் ஆசிரியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை கூறி அழுதுள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர் கைது
புகாரின்பேரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கணித ஆசிரியர் கோவிந்தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்தார். மேலும் இந்த வழக்கில் ஆசிரியர் கோவிந்தனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் கோவிந்தனின் மனைவியும் ஒரு ஆசிரியை ஆவார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
9-ம் வகுப்பு மாணவியை அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.