போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த 22 பேர் மீட்பு

போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்து வேலை செய்த 22 பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2021-04-22 18:00 GMT
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்து வேலை செய்த 22 பேர் மீட்கப்பட்டனர்.
கொத்தடிமைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பாரண்டப்பள்ளி மற்றும் மடத்தானூர் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் சிலர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரான சார்பு நீதிபதி தமிழ்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. 
இதைத்தொடர்ந்து அவரது தலைமையில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி, போச்சம்பள்ளி தாசில்தார் குமரவேல், தேசிய ஆதிவாசி தோழமை கழக வக்கீல் அம்மு, துணை தாசில்தார்கள் சக்தி, அண்ணாதுரை ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
22 பேர் மீட்பு
அப்போது, செங்கல் சூளையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவர்கள் உள்பட 22 பேரை மீட்ட அலுவலர்கள், அவர்களை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தினர். 
விசாரணையின் போது பெண்கள் கூறியதாவது:-
எங்கள் திருமணத்திற்கு முன்பே, எங்கள் மாமியார் செங்கல் சூளையில் வேலை செய்ய தொகை வாங்கி உள்ளார். 7ஆண்டுகளாக அவர்கள் கொடுத்த பணம் கழியவில்லை என கூறி எங்களை கொத்தடிமைகளாக வைத்துள்ளனர். தேர்தலில் வாக்களிக்க கூட சொந்த ஊருக்கு அனுப்பவில்லை. மருத்துவமனைக்கு கூட அனுப்புவது இல்லை.
இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 
இதையடுத்து அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல தேவையான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்