தாறுமாறாக ஓடிய லாரி
பல்லடத்தில் தாறுமாறாக ஓடிய லாரி பெட்டிக்கடை மீது மோதியது. இதனால் லாரியை டிரைவர் குடிபோதையில் ஓட்டினார என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பல்லடம்
பல்லடத்தில் தாறுமாறாக ஓடிய லாரி பெட்டிக்கடை மீது மோதியது. இதனால் லாரியை டிரைவர் குடிபோதையில் ஓட்டினார என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விபத்தை ஏற்படுத்திய லாரி
நாமக்கல்லில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு முட்டை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமதுலத்தீப் வயது 44. என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி பல்லடம் பஸ் நிலையத்தை அடுத்த கொசவம்பாளையம் பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் அங்குமிங்கும் தாறுமாறாக ஓடிய லாரி சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பம் சாய்ந்தது. ஆனாலும் அந்த லாரி நிற்காமல் சாலையோர மரத்தின் கிளையை உடைத்துக்கொண்டு, அதனருகே இருந்த பெட்டிக்கடை மீது மோதியது. இதனால் அந்த பெட்டிக்கடை உடைந்து சின்னாபின்னமானது.
இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது. லாரியில் இருந்த முட்டைகளில் 1000 முட்டை உடைந்துபோனது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை விட்டு விட்டு இறங்கி ஓடி விட்டார். விபத்தில் மின்கம்பம் சாய்ந்ததால், கொசவம் பாளையம் ரோடு, மேற்கு பல்லடம், மற்றும் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
குடிபோதையில் லாரி ஓட்டினாரா
இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், தொழிலாளர்கள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பத்தை அமைத்து மின் இணைப்புகள் வழங்கினர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய லாரியை போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு, தலைமறைவான லாரி டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
எனவே அவரை பிடித்து விசாரித்தால்தான் அவர் குடிபோதையில் லாரியை ஓட்டினாரா அல்லது லாரியை ஓட்டும்போது தூங்கி விட்டாரா என தெரியவரும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லடம் பொள்ளாச்சி சாலையில் குடிபோதையில் டிரைவர் லாரியை ஓட்டியதால் கார் மீது மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உட்பட 3 பேர் கொண்ட ஒரு குடும்பமே பலியானது குறிப்பிடத்தக்கது.