விழுப்புரம் அருகே எரிசாராயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது பாத்திரங்களில் பிடித்துச்சென்றவர்களுக்கு தண்டோரா மூலம் போலீசார் அறிவுரை
விழுப்புரம் அருகே எரிசாராயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்து வழிந்தோடிய எரிசாராயத்தை பாத்திரங்களில் பிடித்துச்சென்றவர்களுக்கு தண்டோரா மூலம் போலீசார் அறிவுரை வழங்கினர்.
விழுப்புரம்,
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில்இருந்து சுமார் 40 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு வேலூர் நோக்கி புறப்பட்டது. விழுப்புரத்தை அடுத்த வி.அகரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, தறிகெட்டு ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டேங்கர் லாரியில் இருந்த எரிசாராயம், சாலையில் கொட்டி ஆறுபோல் ஓடியது. இதையறிந்த வி.அகரம், பஞ்சமாதேவி கிராமத்தை சிலர் அங்கு ஓடிச்சென்று டேங்கர் லாரியில் இருந்து வழிந்தோடிய எரிசாராயத்தை தண்ணீர் பாட்டில்கள், பாத்திரம், குடங்களில் போட்டி போட்டுக்கொண்டு பிடித்துச்சென்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளான எரிசாராயம், சாலையில் கொட்டியதால் அதன் அருகில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். பின்னர் விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தன்பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து சாலையில் கொட்டிக்கிடந்த எரிசாராயத்தின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீ விபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரியை பார்வையிட்டார். பின்னர் அந்த டேங்கர் லாரி அருகில் பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டதன்பேரில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தண்டோரா மூலம் அறிவுரை
மேலும் டேங்கர் லாரி கவிழ்ந்ததும் போலீசார் வருவதற்கு முன்பாகவே மதுப்பிரியர்கள் சிலர் வந்து எரிசாராயத்தை பிடித்துச்சென்றுள்ளதால் அதனை யாரேனும் குடித்துவிட்டு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உடனடி நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். அதன்படி எரிசாராயம் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கி கூறும் வகையில் அப்பகுதி முழுவதும் தண்டோரா மூலமாக போலீசார் அறிவுறுத்தியதோடு கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரியில் இருந்து பிடித்துச்சென்ற எரிசாராயத்தை யாரும் குடிக்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனிடையே நேற்று மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டேங்கர் லாரி கவிழ்ந்ததால் கோலியனூர்- பண்ருட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அரசூர் நெடுஞ்சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.