கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-04-22 15:21 GMT
பொள்ளாச்சி,

கொரோனா பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகமாகி உள்ளது.

இதையொட்டி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் இதுவரைக்கும் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 517 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 15 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்து உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 பேர் இறந்து உள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்பட 198 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் 40 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்