2,440 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும்

ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு 2,440 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி நரேந்திரனிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

Update: 2021-04-22 14:44 GMT
பொள்ளாச்சி,

ஆனைமலை வட்டார (பி.ஏ.பி.) ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரனிடம் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆழியாறு பழைய ஆயக்கட்டு மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 5 கால்வாய்கள் மூலம் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு குறித்த நேரத்திற்குள் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் வழங்கியதால் விவசாயம் சிறப்பாக நடைபெற்றது. 

இதேபோன்று நடப்பு ஆண்டிற்கும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 2-ம் போக நெல் பாசனத்திற்கும், கரும்பு, தென்னை, வாழை போன்ற நிரந்தர பயிர்களின் பாசன தேவைக்கு வருகிற 16-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை 11 மாதங்களுக்கு 2440 மில்லியன் கன அடி தண்ணீர் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வழங்க வேண்டும்.

பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய்களான அரியாபுரம், பள்ளிவிளங்கால், பெரியணை, வடக்கலூர், காரப்பட்டி ஆகிய 5 கால்வாய்கள் மூலமம் பாசன வசதி பெறுகின்றன. கால்வாய்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் செல்வதால் ஒவ்வொரு ஆண்டும் செடி, கொடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 

இதனால் ஆண்டுதோறும் செடி, கொடிகளை அகற்ற வேண்டிய அவசியமாகிறது. இதற்கிடையில் மழைக்காலங்களில் மேடான விவசாய நிலங்களில் இருந்து வரும் சேறு கால்வாயில் படிந்து விடுகிறது.
கடந்த ஆண்டுகளில் குடிமராமத்து பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றது. இந்த ஆண்டு இதுவரைக்கும் குடிமராமத்து பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. 

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக வேறு வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நடப்பு ஆண்டிற்கு தண்ணீர் திறக்கப்படும் வருகிற 15-ந்தேதிக்கு முன்பாக கால்வாய்களை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்