உடுமலையில் அரசு பஸ் ஜப்தி

பஸ் மோதிய விபத்தில் இறந்தவரது குடும்பத்திற்கு கோர்டடு் உத்தரவுப்படி இழப்பீடு தொகை வழங்காததால் உடுமலையில், அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2021-04-22 13:48 GMT
உடுமலை
பஸ் மோதிய விபத்தில் இறந்தவரது குடும்பத்திற்கு கோர்டடு் உத்தரவுப்படி இழப்பீடு தொகை வழங்காததால் உடுமலையில், அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
இது பற்றிய கூறப்படுவதாவது
பஸ்மோதி விபத்து
உடுமலை சாதிக் நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவரது மகன் சுரேஷ்குமார்சம்பவத்தின் போது வயது 25. சுரேஷ்குமாருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.லாரி டிரைவராக வேலை செய்து வந்த சுரேஷ்குமார் கடந்த 23.10.2015ந்தேதி மோட்டார் சைக்கிளில் பழனிக்கு சென்றுவிட்டு உடுமலைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பழனி- உடுமலை சாலையில் காரமடை என்ற இடத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, உடுமலையில் இருந்து பழனிக்கு சென்று கொண்டிருந்த தமிழ் நாடு அரசுபோக்குவரத்துக்கழக மதுரை கிளையின் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து சுரேஷ்குமாரின் அப்பா சிவசுப்பிரமணி உள்ளிட்ட குடும்பத்தினர் ரூ.40 லட்சம் இழப்பீடுதொகை வழங்கக்கோரி, உடுமலை சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உடுமலை சப்கோர்ட்டு நீதிபதி எம்.சுரேஷ் விசாரித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மதுரை கிளை, இழப்பீடு தொகையாக ரூ.18லட்சத்து 84 ஆயிரத்து 400 வழங்கும்படி கடந்த 22.4.2019ல் உத்தரவிட்டார். ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீடு தொகையை வழங்கவில்லை.
அரசு பஸ் ஜப்தி
இது குறித்து இழப்பீடு தொகை கிடைக்க வழிவகை செய்யும்படி சிவசுப்பிரமணி தரப்பில் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இழப்பீடு தொகை வழங்காததால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மதுரை கிளை பஸ்சை ஜப்தி செய்யும்படி கடந்த 16.9.2020ந்தேதி சப்கோர்ட்டு நீதிபதி எம்.சுரேஷ் உத்தரவிட்டார். அதன்படி, நேற்று முன்தினம்  உடுமலை மத்திய பஸ்நிலையத்திற்கு வந்த தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக்கழக மதுரை கிளை பஸ்சை, உடுமலை சப்-கோர்ட்டு ஊழியர் ஜப்தி செய்து கோர்ட்டிற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார்.
இழப்பீடு தொகை வழங்கப்படாததால் இதுவரை வட்டியுடன் சேர்த்து ரூ.24  லட்சத்து 11 ஆயிரத்து 910 மற்றும் பின்வட்டி வழங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இழப்பீடு கோரிய சிவசுப்பிரமணி சார்பில் வக்கீல் யு.எஸ்.அன்புசெழியன் ஆஜராகி வாதாடினார்.

---
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஜப்தி செய்யப்பட்ட போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்