மாணவி குட்டையில் மூழ்கி பலி
அவினாசி அருகே குளிக்க சென்ற பள்ளி மாணவி குட்டையில் மூழ்கி பலியானாள்.
அவினாசி, ஏப்.23-
அவினாசி அருகே குளிக்க சென்ற பள்ளி மாணவி குட்டையில் மூழ்கி பலியானாள்.
பள்ளி மாணவி
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராயம்பாளையம் ஜெயபிரகாஷ் வீதி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி. கூலி தொழிலாளி. இவரது மனைவி பழனாள். இவர்களது மகள்கள் துளசிமணி 16, கிருத்திகா14, ரித்திகாஸ்ரீ 12.
கிருத்திகா அவினாசியில் உள்ள அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று கிருத்திகா அப்பகுதியை சேர்ந்த சக மாணவ-மாணவிகளுடன் ராயம்பாளையம் அருகே உள்ள சின்னேரிபாளையம் அண்ணமார் கோவில் குட்டையில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிருத்திகா குட்டையில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த அவருடன் சென்றவர்கள் கிருத்திகாவை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து ஊருக்குள் வந்து கிருத்திகா தண்ணீரில் மூழ்கி விட்டாள் என்று தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் குட்டையில் இறங்கி கிருத்திகாவை தேடியுள்ளனர். இருப்பினும் கிருத்திகா கிடைக்காததால் அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடல் மீட்பு
இதையடுத்து நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குட்டையில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி குட்டையில் மூழ்கி இறந்து கிடந்த கிருத்திகாவின் உடலை மீட்டனர். பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைககாக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பள்ளி மாணவி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்வம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
---
கிருத்திகா
==========