மரணத்தின் பிடியில் சிக்கிய சிறுவனை மீட்ட மராட்டிய ரெயில்வே ஊழியருக்கு பேனர் வைத்து பாராட்டு தெரிவித்த பொதுமக்கள்
மரணத்தின் பிடியில் இருந்த சிறுவனை மீட்ட ரெயில்வே ஊழியருக்கு பேனர் வைத்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டம் வடுவூரில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.
வடுவூர்,
மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள வாங்கனி ரெயில்வே நிலையத்தில் கடந்த 17-ந் தேதி மாலை 6 வயது சிறுவன் ஒருவன் தனது பார்வையற்ற தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் தவறி விழுந்தான். அதேநேரத்தில் சற்று தொலைவில் அந்த தண்டவாளத்தில் ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது.
இந்த இக்கட்டான சூழலில் அந்த ரெயில் நிலையத்தில் பணியாற்றும் மயூர் செல்கே என்பவர் தனது உயிரை துச்சமாக மதித்து ஓடிச்சென்று தண்டவாளத்தில் விழுந்த சிறுவனை காப்பாற்றி, நடைமேடை மீது ஏறி தன்னையும் காப்பாற்றி கொண்டார்.
இந்த காட்சிகள் அனைத்தும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மரணத்தின் பிடியில் சிக்கிய சிறுவனை கண்ணிமைக்கும் நேரத்தில் மீட்டு பலருடைய மனங்களையும் குளிர செய்த ரெயில்வே ஊழியர் மயூர் செல்கேவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ரெயில்வே துறை அவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கி பாராட்டியது. அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் தற்போது பரவலாக எழுந்துள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் வடுவூர் பஸ் நிறுத்தம் அருகே, ரெயில்வே ஊழியரின் வீர, தீர செயலை பாராட்டி பொதுமக்கள் பேனர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து தெட்சின ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில், ‘ரெயில்வே ஊழியரின் இந்த பணி அவர் தனது பணியின் மேல் கொண்டுள்ள பொறுப்பையும், மனிதாபிமானத்தையும் காட்டுகிறது. இவருக்கு ரெயில்வே நிர்வாகம் பாராட்டையும் பரிசையும் வழங்கியுள்ள போதும் அவருக்கு பதவி உயர்வும் வழங்க வேண்டும். இவருக்கு பதவி உயர்வு வழங்கும் பட்சத்தில் மற்ற ஊழியர்களையும் அது உற்சாகப்படுத்துவதாகவும், ஊக்கப்படுத்துவதாக அமையும்’ என்றார்.