கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை
சிவகாசியில் முன் விரோத தகராறில் கட்டிட தொழிலாளியை அடித்து கொலை செய்த கும்பல் அவரது உடலை காட்டு பகுதியில் வீசி சென்றுவிட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி,ஏப்.
சிவகாசியில் முன் விரோத தகராறில் கட்டிட தொழிலாளியை அடித்து கொலை செய்த கும்பல் அவரது உடலை காட்டு பகுதியில் வீசி சென்றுவிட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிட தொழிலாளி
சிவகாசி ரிசர்வ் லைன் வசந்தம் நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 31). கட்டிட தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், யுவராஜ், ஆதவ் என்ற 2 மகன்களும் உள்ளனர். மாரியம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மானகசேரியில் வசித்து வருகிறார். நவநீத கிருஷ்ணன் தனது தாய் பேச்சியம்மாளுடன் ரிசர்வ்லைனில் வசித்து வந்தார்.
நவநீதகிருஷ்ணன் அவ்வப்போது நண்பர்களுடன் மதுபான கூடத்துக்கு சென்று மது அருந்துவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு மதுபான கூடத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருந்த போது அங்கு வந்த சிவகாசியை சேர்ந்த அரவிந்த் என்கிற பார்த்திபனுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நவநீதகிருஷ்ணன், அரவிந்தனை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
தனியாக...
இந்த நிலையில் நேற்று மதியம் நவநீதகிருஷ்ணன் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி பின்னர் அவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் நேரில் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் நவநீதகிருஷ்ணனின் தாய் பேச்சியம்மாள் வீடு திரும்பிய போது வீட்டில் ரத்தம் வழிந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியை சேர்ந்த சிலர் உதவியுடன் நவநீதகிருஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் சிவகாசி அருகே மல்லி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்.புதுப்பட்டி காட்டுப்பகுதியில் நவநீத கிருஷ்ணன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் எஸ்.புதுப்பட்டிக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் இருந்த நவநீதகிருஷ்ணனை சரமாரியாக தாக்கி கடத்திச் சென்று கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசிச் சென்ற கும்பலை சிவகாசி டவுன் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நவநீதகிருஷ்ணனின் தாய் பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் அரவிந்த் என்கிற பார்த்திபன் உள்பட 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தேடி வருகிறார்கள்.
கட்டிட தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.