வளநாடு அருகே டிரைவரை தாக்கி ரூ.40 ஆயிரம் கொள்ளை
வளநாடு அருகே டிரைவரை தாக்கி ரூ.40 ஆயிரம் கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
துவரங்குறிச்சி,
புதுக்கோட்டை மாவட்டம் நரிமேடு ராஜீவ் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 33). லாரி டிரைவரான இவர் திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் இருந்து புதுக்கோட்டைக்கு லாரியில் கோழிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். லாரியில் புத்தாம்பூர் சேர்ந்த கிளீனர் முருகேஷ்(32), சுமைதூக்கும் தொழிலாளி சுந்தர்ராஜ் (42) ஆகியோர் உடன் சென்றனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே கைகாட்டி பகுதியில் இருந்த பஸ்நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நேற்று முன்தினம் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3.40 மணி அளவில் சந்தோஷ் லாரியில் இருந்து கீழே இறங்கினார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், டிரைவரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம், வெள்ளி கை சங்கிலி ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.