காட்பாடி அருகே பட்டாசுக்கடை விபத்தில் தந்தை-மகன்கள் பலி. ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

காட்பாடி அருகே பட்டாசுக்கடை வெடி விபத்தில் தந்தை-2 மகன்களை பறிகொடுத்த பெண் ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-21 17:22 GMT
ஜோலார்பேட்டை

3 பேர் கருகி பலி

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 60). இவர், லத்தேரி பஸ் நிலையத்தில் பட்டாசுக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 18-ந்தேதி நண்பகல் 12 மணியளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் பட்டாசை வெடித்துக் காண்பிக்கச் சொன்னதால் மோகன் பட்டாசை வெடித்துள்ளார்.

அதில் ஏற்பட்ட தீப்பொறி கடையில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்ததால், அங்கிருந்த பட்டாசுகள் அனைத்தும் ெவடித்தன. அதில் மோகனின் இரு பேரன்களான தனுஜ் (8), தேஜஸ் (7) ஆகியோர் பயந்து கடைக்குள் ஓடினர். கடைக்குள் ஓடிய பேரன்களை காப்பாற்ற முயன்றபோது மோகனும் தீயில் சிக்கி விட்டார். பட்டாசுகள் அனைத்தும் வெடித்து பட்டாசுகடையே எரிந்து தீக்கிரையானதால் மோகன், அவரின் பேரன்கள் என 3 பேரும் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இது தொடர்பாக லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

உறவினர்கள் பதற்றம்

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வெடி விபத்தில் தந்தை-மகன்களை இழந்த வித்யா(வயது 35) ஏற்கனவே கருத்துவேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து இரு மகன்களுடன் தந்தை மோகன் வீட்டில் வசித்து வந்தார். 

இந்த நிலையில் தனக்கு ஆறுதலாக இருந்த தந்தை மற்றும் மகன்கள் இருவரையும் ஒரே நேரத்தில் இழந்ததால் வித்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று அதிகாலை 2 மணியளவில் வித்யா வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். பதற்றம் அடைந்த உறவினர்கள் அவரை தேடினர். 

அப்போது லத்தேரி ெரயில் நிலையம் அருகே பெண் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் கூறியதைக் கேள்விப்பட்ட உறவினர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு இறந்து கிடந்தது வித்யா எனத் தெரிய வந்தது.

தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ெரயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

போலீஸ் விசாரணையில் 2 மகன்களும், தனது தந்தையும் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் மனவேதனையில் இருந்து வந்த வித்யா ஓடும் ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.  மகன்கள் பலியான துக்கம் தாளாமலும், அவர்கள் மீது வைத்துள்ள பாசத்தாலும் தாய் வித்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்