கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி - சாவு எண்ணிக்கை 354 ஆக உயர்வு

குமரியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர். இதனால் சாவு எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-04-21 16:54 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அதேபோல் கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று 191 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.இதை தொடர்ந்து தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 923 பேர் ஆவார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் மூன்று பேர் நேற்று பலியானார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

கப்பியறை அருகிலுள்ள பருத்திவிளையைச் சேர்ந்த 76 வயது முதியவர் கடந்த 18-ந் தேதி முதல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை 4.50 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் கிராத்தூர் பூவன்கோடு பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் கடந்த 12-ந் தேதி முதல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று காலை 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தேவிகோடு அருகிலுள்ள மணிக்காவிளையைச் சேர்ந்த 46 வயது ஆண் கடந்த 17-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் நேற்று காலை 8.25 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த மூன்று பேருடன் சேர்த்து குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்