திருக்கோவிலூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
திருக்கோவிலூர் அருகே மினிபஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ரிஷிவந்தியம்,
திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 10 மணி அளவில் தனியார் மினி பஸ் ஒன்று ஆவிபுதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் பஸ்சை ஓட்டினார். மணம்பூண்டியை சேர்ந்த காளிதாஸ்(48) கண்டக்டராக பணியில் இருந்தார்.
கொரோனா காலம் என்பதால் பஸ்சில் குறைந்த அளவிலேயே பயணிகள் இருந்தனர். திருக்கோவிலூர் ஏரிக்கரை அருகே வந்தபோது எதிரில் வந்த இருசக்கர வாகனத்துக்கு வழி விடுவதற்காக டிரைவர் பஸ்சை ஓரம் கட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சில் இருக்கைகளுக்கு இடையே சிக்கி தவித்த மற்றும் காயம் அடைந்த பயணிகள் அனைவரும் கூச்சல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஓடோடி வந்து பஸ்சுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் வீரட்டகரம் காலனியை சேர்ந்த சரோஜா(55), அஞ்சலை(55), திருக்கோவிலூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தனலட்சுமி(46) உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அஞ்சலை உள்பட 9 பேர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சரோஜா, தனலட்சுமி இருவரும் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருக்கோவிலூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.