பால் வியாபாரிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் படுகாயமடைந்த பால் வியாபாரிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2021-04-21 14:17 GMT
திண்டுக்கல்:
விபத்தில் படுகாயமடைந்த பால் வியாபாரிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
பால் வியாபாரி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா நாலுபுளிக்கோட்டையை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் பூபதி (வயது 31). பால் வியாபாரி. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி இவர், நவாமரத்துப்பட்டியில் இருந்து வேடசந்தூர் நோக்கி செல்லும் அரசு பஸ்சில் சென்றுகொண்டிருந்தார்.
வேடசந்தூர் அருகே உள்ள ஒரு பாலத்தில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பூபதி படுகாயமடைந்தார். பின்னர் அவர் அரசு போக்குவரத்து கழகம் தனக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி மாவட்ட சிறப்பு சப்-கோர்ட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அரசு பஸ் ஜப்தி
மனுதாரர் சார்பில் வக்கீல் பழனிச்சாமி இந்த வழக்கை நடத்தி வந்தார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. அப்போது விபத்தில் படுகாயமடைந்த பூபதிக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்து 785-ஐ இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவுப்படி பூபதிக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை.
இதையடுத்து பூபதி சார்பில் கோர்ட்டில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சுதாகர், இழப்பீடு வழங்காததால் மதுரை அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று திண்டுக்கல் பஸ் நிலையத்தில் திருச்சி நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து, மாவட்ட கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.

மேலும் செய்திகள்