சுற்றுலா வேனில் ‘ஸ்பீக்கர்’ திருடியவர் சிக்கினார்

கோத்தகிரி அருகே சுற்றுலா வேனில் ‘ஸ்பீக்கர்’ திருடியவர் போலீசில் சிக்கினார்.

Update: 2021-04-21 13:54 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட மிளிதேன் அருகே உள்ள காக்காசோலை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தனக்கு சொந்தமான சுற்றுலா வேனை, கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் டானிங்டன் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகில் நிறுத்தி இருந்தார். 

அப்போது வேனில் இருந்த ரூ.17 ஆயிரம் மதிப்பிலான ஸ்பீக்கர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை மர்ம ஆசாமி திருடி சென்றுவிட்டார். இது தொடர்பாக கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் அந்த பெட்ரோல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சுற்றுலா வேனில் நஞ்சநாடு பகுதியில் உள்ள பாகலட்டி கிராமத்தை சேர்ந்த மனோகரன்(வயது 42) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

சுமார் 2 மாதங்களுக்கு பிறகு குன்னூர் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த மனோகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர் கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்