வாணியம்பாடி சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரானா. போலீஸ் நிலையம் மூடப்பட்டது

வாணியம்பாடி தாசில்தாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சப்- இன்ஸ்பெக்டருக்கும் கொரானா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து தாலுகா போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

Update: 2021-04-21 13:15 GMT
வாணியம்பாடி

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் உத்தரவின் பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் வாணியம்பாடி நகர பகுதியில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 14 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
வாணியம்பாடி பஸ் நிலையத்தில் உள்ள பிரபல ஓட்டல் ஊழியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஓட்டல் மூடப்பட்டுள்ளது. மேலும் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

போலீஸ் நிலையம் மூடல்

அதைத்தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று சுகாதார பணியில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போடப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 இதேபோல் கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருந்ததால் வாணியம்பாடி தாசில்தாருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வேலூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகள்