சுங்குவார்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் சாவு

சுங்குவார் சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2021-04-21 00:58 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த கீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் கஜேந்திரன் (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வந்தான். கஜேந்திரன் நேற்று பாட்டி பொட்டம்மாளுடன் துணி துவைக்க வீட்டின் அருகே உள்ள குளத்துக்கு சென்றான். அப்போது கஜேந்திரன் தவறி குளத்தில் விழுந்தான்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி கூச்சல் போட்டார்.

பிணமாக மீட்பு

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து குளத்தில் மூழ்கிய கஜேந்திரனை தேடினர். 4 மணி நேரத்துக்கு பின்னர் கஜேந்திரனை பிணமாக மிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் கஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்