சேலம் அருகே போலீஸ் என கூறி வியாபாரி உள்பட 2 பேரிடம் பணம் பறிப்பு

2 பேரிடம் பணம் பறிப்பு

Update: 2021-04-20 22:53 GMT
சேலம்:
சேலம் அருகே போலீஸ் என கூறி வியாபாரி உள்பட 2 பேரிடம் பணம் பறித்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாபாரியிடம் பணம் பறிப்பு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோம்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50), புளி வியாபாரி. இவர் நேற்று சேலம் அருகே உள்ள வலசையூர், ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் புளி வியாபாரம் செய்தார். பின்னர் செல்வம் ஊருக்கு புறப்பட்டார்.
மஞ்சவாடி கணவாய் சோதனைச்சாவடி பகுதியில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் இவரை வழிமறித்தான். பின்னர் அவன் போலீஸ் என கூறி செல்வத்தை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான்.
சிறுவன் சிக்கினான்
இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் வியாபாரியிடம் பணம் பறித்தது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுவன் ஏற்கனவே போலீஸ் என கூறி ஏற்காடு பகுதியை சேர்ந்த அழகேசன் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ரூ.200 பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்