பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி கொலையில் கைதான 4 பேருக்கு கொரோனா
பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூரில் கூலித்தொழிலாளியான முகேஷ் என்ற ராக்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மேலப்பாவூரைச் சேர்ந்த கருப்பையா மகன் கனிபாண்டி (வயது 29), சுடலைமாடன் மகன் சீவலப்பேரி என்ற ராஜபாண்டி (34), முத்தையா (41), முருகன் என்ற காட்டாமுருகன் (47) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் 4 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த 4 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக நேற்று முன்தினம் முருகேசன் என்ற சுருக்கான் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.