குற்றாலம் அருவியில் குளிக்க தடை
இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி, ஏப்.21-
இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல தடை
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி இரவு நேரத்தில் இயக்கப்படும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் அருவி பாதைகள்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஆண்டு சீசன் சமயத்தில் இதே காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோது 10 மாதங்களுக்கு பிறகு குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அவர்கள் குளித்து வந்தனர். தற்போது அருவிகளில் மிகவும் குறைவாக தண்ணீர் விழுகிறது. இருந்தாலும் சுற்றுலாப்பயணிகள் சிலர் குளித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போதைய சூழலில் அரசு உத்தரவின்படி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு நுழைவு வாயிலில் தடுப்புகள் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் அருவி பகுதிகளில் பார்வையிடவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
கடைகள் அடைப்பு
இதைத்தொடர்ந்து அருவிப்பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பல வியாபாரிகள் தங்களது பொருட்களை மூட்டைகளில் கட்டி அள்ளி சென்றனர். அவர்கள் கூறுகையில், “கடைகளில் இந்த பொருட்களை அடைத்து வைத்தால் அவை சேதம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த முறை இதே போன்று அடைக்கப்பட்டு பல பொருட்களை ஆற்றில் கொட்டினோம். எனவே உணவு தொடர்பான பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறோம்” என்றனர்.