கடையநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

கடையநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-20 22:10 GMT
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அடவிநயினார் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மேட்டு கால் ஷட்டரை சரிசெய்யும் பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வந்தது. இந்த பணியில் திருச்சி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்த சந்தனராஜ் மகன் ஜான்சன் ரூபன் (வயது 20) என்பவர் உள்பட 5-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

நேற்று காலை பணி முடிந்த நிலையில் ஷட்டர் மின் இணைப்பை சரிசெய்யும்போது எதிர்பாராதவிதமாக ஜான்சன் ரூபன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் 28 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்த அணையில் தூக்கி வீசப்பட்டு நீரில் மூழ்கினார். உடன் பணி செய்தவர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்