இரவு நேர ஊரடங்கு; நெல்லையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் விஷ்ணு ஆலோசனை
இரவு நேர ஊரடங்கு தொடர்பாக நெல்லையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் விஷ்ணு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
நெல்லை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் இதை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று ஆலோசனை நடத்தினார். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இருந்தபடி அவர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போதைய அரசு விதிமுறைப்படி திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு நிகழ்வில் 50 பேருக்கு மிகாமலும் நிலையான வழிகாட்டு நடைமுறையை பின்பற்றி கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான சிறப்பு அனுமதி எதுவும் பெற தேவையில்லை.
சமுதாயக்கூடம் மற்றும் திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அந்த மண்டப நிர்வாகத்தினர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிக்கவும், தியேட்டர்கள், பொதுச்சந்தைகள், உணவகங்கள், வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பதிவு செய்யவும், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஊரகப்பகுதியில் வட்ட அளவிலும், மாநகர பகுதிகளில் மண்டல அளவிலும் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அந்த குழுவினர் கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் இதுவரை நடத்திய ஆய்வில் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.55 லட்சத்து 96 ஆயிரம் வசூலித்து உள்ளதோடு, பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளனர். மாவட்ட எல்லையில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகள் மற்றும் மாவட்டத்தில் அமைந்துள்ள புறக்காவல் சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை 04622501070 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 6374013254, 9499933893 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் முதன் முறையாக நெல்லை மாவட்ட நிர்வாகம் ”கொரோனா பாதுகாப்பு” என்ற தலைப்பிலான இணையதளம் https://covidcaretirunelveli.in உருவாக்கி உள்ளது. இதை கலெக்டர் விஷ்ணு நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்த இணையதளத்தில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 83 கொரோனா தடுப்பூசி மையங்கள், 54 மாதிரி சேகரிப்பு மையங்கள், 5 கொரோனா சோதனை மையங்கள் மற்றும் 28 கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றின் அமைவிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள மையங்களின் அமைவிடங்களை எளிதாக ‘GIS’ தொழில்நுட்பத்தில் வரைபடமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் கொரோனா சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்குரிய விளக்கங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழிலும் தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.