மணல் கடத்தப்பட்ட 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்தப்பட்ட 8 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-04-20 20:47 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் அறங்கோட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்ரீபுரந்தான் நோக்கி வந்த 2 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்ய முயன்றனர். போலீசாரை கண்டவுடன் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 2 பேர், சாலையின் ஓரத்தில் மாட்டு வண்டிகளை நிறுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து மாட்டு வண்டிகளை போலீசார் சோதனை செய்தபோது அதில் மணல் ஏற்றப்பட்டிருந்தது. மேலும் விசாரணையில், அறங்கோட்டை கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதிகளில் இருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிக்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேரை தேடி வருகிறார்கள்.
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ், நேற்று அதிகாலை அவரது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது உத்திரகுடி கிராமத்தை சேர்ந்த வேலன்(வயது 45), ராஜாராம்(55), பொன்னுசாமி(63), வானதிராயன்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன்(24), அங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(39), இளங்கோவன் (55) ஆகியோர் வெவ்வேறு இடங்களில் மாட்டு வண்டிகளில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரிக்க முயன்றபோது, அவர்கள் மாட்டு வண்டியில் இருந்து மாடுகளை அவிழ்த்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ், தா.பழூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்