சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை நேற்று வெறிச்சோடியது. திற்பரப்பு அருவிக்கு செல்லும் பாதையும் மூடப்பட்டது.
கன்னியாகுமரி,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை நேற்று வெறிச்சோடியது. திற்பரப்பு அருவிக்கு செல்லும் பாதையும் மூடப்பட்டது.
சுற்றுலா தலங்களுக்கு தடை
தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி நேற்று முதல் சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது.
குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரைக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி
இதைதொடர்ந்து கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல், காந்தி மண்டபம் அருகில் உள்ள கடற்கரைக்கு செல்லும் பாதை, பகவதி அம்மன் கோவில் கடற்கரைக்கு செல்லும் பாதையிலும் போலீசார் கயிறு கட்டி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால், தடையையும் மீறி நேற்று காலையில் கன்னியாகுமரி கடற்கரைக்கு சில சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
வெறிச்சோடிய கடற்கரை
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் கடற்கரை பகுதியான காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை பகுதி, சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு நேற்று படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
பக்தர்களுக்கு அனுமதி
விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்பட்ட படகுகள் படகுத்துறையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மறு உத்தரவு வரும் வரை படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு பலகை பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக நுழைவுவாயிலில் வைக்கப்பட்டு இருந்தது.
அதே சமயத்தில் பகவதி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு எந்தவித தடையும் இல்லை. இதனால், உள்ளூர் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
பூங்கா மூடப்பட்டது
இதேபோல் கன்னியாகுமரியில் உள்ள அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்காவும் நேற்று முதல் மூடப்பட்டது. மேலும், அங்கும் நுழைவுவாயிலில் அரசு மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் மற்றும் ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் இன்றி அறைகள் காலியாக இருந்தன. பெரும்பாலான லாட்ஜ்கள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் லாட்ஜ் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், ஊழியர்கள், கடை வியாபாரிகளும் பரிதவித்தனர்.
திற்பரப்பு அருவி- தொட்டிபாலம்
குமரியின் குற்றாலம் என திற்பரப்பு அருவி அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து உற்சாகமாக குளித்து விட்டு செல்வார்கள்.
அரசின் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் திற்பரப்பு அருவிக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள கேட்டை பூட்டினர்.
இதனால், அங்கு வந்த சில சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல், மாத்தூர் தொட்டிபாலம், அதன் அருகில் உள்ள பூங்கா ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.