இறந்தவர் உடலை சுமந்து கால்வாயை கடந்து செல்லும் அவலம்
ஆரல்வாய்மொழி அருகே இறந்தவரின் உடலை கால்வாயில் இறக்கி பொதுமக்கள் தூக்கி சென்றனர். மாற்றுப்பாதை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே இறந்தவரின் உடலை கால்வாயில் இறக்கி பொதுமக்கள் தூக்கி சென்றனர். மாற்றுப்பாதை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய பாலம் பணி
ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி-சந்தைவிளைக்கு இடையே நாஞ்சில் நாடு புத்தணாறு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே பழமையான குறுகிய பாலம் ஒன்று இருந்தது. அந்த பாலம் மிகவும் சேதமடைந்து இருந்ததாலும், போக்குவரத்துக்கு வசதியில்லாமல் மிகவும் குறுகியதாக இருந்ததாலும் அதை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என அந்தபகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன் பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அதன் அருகே ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவில் சிறிய மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றுப்பாதை வழியாக சிறிய வாகனமோ, ஒருசிலர் சேர்ந்தோ செல்ல முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இறந்தவரின் உடலுடன்
புதிய பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தையொட்டி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. இங்கு இறந்தவர் உடலை தகனம் செய்ய வரும்போது இந்த பாலத்தை கடந்து தான் வரவேண்டும்.
இந்தநிலையில் தாழக்குடியில் நேற்று முன்தினம் 55 வயதுடைய ஆண் ஒருவரும் இறந்தார். அவரின் உடலை தகனம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். தற்போது, பாலம் பணி நடைபெற்று வருவதாலும், சரியான மாற்று பாதை இல்லாததாலும் இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சிலர் சேர்ந்து உடலை கால்வாய்க்குள் இறக்கி தண்ணீர் வழியாக மறுகரையில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.
மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பாலப்பணி நடைபெறுவதை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், விரைந்து முடிக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம். பாலப்பணி முடியும் வரை இருச்சக்கர வாகனங்கள், பொதுமக்கள் சேர்ந்து செல்லும் வகையில் மாற்றுப்பாதையை அமைக்காததால், இறந்தவரின் உடலை கால்வாய்க்குள் இறக்கி கொண்டு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கடந்த 7-ந்தேதி ஒரு மூதாட்டி இறந்துவிட்டார். அவரது உடலையும் இதேபோல் தான் கொண்டு சென்று தகனம் செய்தோம்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும். அவ்வாறு அமைக்காவிட்டால் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று கூறினர்.