குட்டையில் மூழ்கி அக்காள்-தம்பி உள்பட 3 பேர் பலி
விக்கிரவாண்டி அருகே குட்டையில் மூழ்கி அக்காள் தம்பி உள்பட 3 பேர் பலியானார்கள்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சபரிநாதன்(வயது 30). தொழிலாளி. இவரது மகள் கனிஷ்கா(8), மகன் லத்தீஷ்(5). அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகள் ரக்ஷயா(7), மகன் தர்ஷன்(5).
சிறுவர்கள் 4 பேரும் நேற்று மாலை 5 மணி அளவில் பொன்னங்குப்பத்தில் உள்ள மீன்பிடி குட்டையில் குளிக்க சென்றனர். அங்கு ஒவ்வொருவராக குட்டையில் இறங்கி குளித்தனர். அப்போது 4 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். நீச்சல் தெரியாமல் தத்தளித்த 4 சிறுவர்களும், காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினர்.
3 போ் பலி
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதற்கிடையில் சிறுவர்கள், குட்டையில் மூழ்கினர். உடனே குட்டையில் இறங்கி, சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் தர்ஷன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டான்.
கனிஷ்கா, ரக்ஷயா, லத்தீஷ் ஆகிய 3 பேரும் குட்டையில் மூழ்கி பலியானார்கள். சிறிது நேரத்தில் 3 சிறுவர்களும் பிணமாக மீட்கப்பட்டனர். இவர்களது உடல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது காண்போரின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தது.
சோகத்தில் மூழ்கிய கிராமம்
இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்டையில் மூழ்கி அக்காள்-தம்பி உள்பட 3 பேர் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.