சத்திரப்பட்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி

சத்திரப்பட்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2021-04-16 14:30 GMT
சத்திரப்பட்டி:
சத்திரப்பட்டி அருகே உள்ள கோம்பைபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பிரவீன் (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது உறவினர் அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் தவசி (20). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு உழவு பணி செய்வதற்காக டிராக்டரில் சென்றார். பிரவீனையும் அவர் தன்னுடன் அழைத்து சென்றார். 
இதையடுத்து அந்த தோட்டத்தில் 2 பேரும் டிராக்டரில் உழவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த பிரவீன், டிராக்டரின் சக்கரத்தில் சிக்கினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த தவசி, உடனடியாக டிராக்டரை நிறுத்தினார். ஆனால் இதில் படுகாயம் அடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்