காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுர கதவில் சிக்கி 3 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுர கதவில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் புகழ் பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. பக்தர்களின் தரிசனத்துக்காக நேற்று இந்த கோவிலின் ராஜகோபுர கதவை கோவிலில் பணிபுரியும் காவலர் மணி் சிலரது உதவியுடன் திறக்கும் பணியில் ஈடுபட்டார்.
ஒருபக்க கதவை திறந்துவிட்டு மறுபக்க கதவை திறக்கும்போது எதிர்பாராத விதமாக வீசிய காற்றால் கதவு மூடியது.
அப்போது அருகே நின்று கொண்டிருந்த பெண் பக்தர் லட்சுமி (வயது 43), கோவில் காவலர் மணி (65), மற்றொரு பக்தர் தியாகராஜன் (63) ஆகியோர் கதவின் இடுக்கில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அங்கு இருந்த பக்தர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
படுகாயம் அடைந்த லட்சுமி மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கோவில் நிர்வாகத்தினரிடம் சிவகாஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.