அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி சென்ற 13 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்; சென்னிமலை அருகே பரபரப்பு

சென்னிமலை அருகே அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி சென்ற 13 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-15 22:55 GMT
சென்னிமலை,

சென்னிமலை அருகே பனியம்பள்ளி ஊராட்சியில் கல்குவாரிகள் செயல்படுகிறது. இந்த குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் ஜல்லி கற்கள் பல்வேறு ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வாறு செல்லும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக ஜல்லி கற்கள் பாரம் ஏற்றி செல்வதுடன், அதன் மீது தார்பாய் போட்டு மூடாமல் கொண்டு செல்வதால் ஜல்லி கற்கள் ரோட்டில் விழுந்துவிடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் தார்பாய் போட்டு மூடாமலும் அளவுக்கு அதிகமாக ஜல்லி கற்கள் ஏற்றியபடியும் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஓட்டப்பாறை பிரிவு வழியாக 13 டிப்பர் லாரிகள் சென்றன. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், 13 லாரிகளையும் சிறைபிடித்தனர்.  இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘பெருந்துறை தாசில்தார் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். எனினும் இரவு வெகு நேரமாகியும் தாசில்தார் வராததால் சிறைபிடிக்கப்பட்ட லாரிகள் அந்த பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. இதன்காரணமாக சென்னிமலை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்