மேச்சேரி மின்வாரிய ஊழியர் கொலை வழக்கில் தலைமறைவானவர் ஈரோடு கோர்ட்டில் சரண்
மேச்சேரி மின்வாரிய ஊழியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் ஈரோடு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
ஈரோடு
மேச்சேரி மின்வாரிய ஊழியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் ஈரோடு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
மின்வாரிய ஊழியர்
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டி ஊராட்சி நல்லியண்ணன் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 56). இவர் சேலம் உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், தமிழ் செல்வி என்ற மகளும், செல்வகுமார், கலையரசன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
இவர்களில் செல்வக்குமார் அதேபகுதியில் உள்ள நொரச்சி வளவை சேர்ந்த தமிழ்நிதி (49) என்பவரின் மகள் சவுந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சம்பவத்தன்று சவுந்தர்யாவுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சவுந்தர்யா தனது தந்தை தமிழ்நிதிக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ் நிதி, அவரது மனைவி சித்ரா, மகன்கள் பிரசாந்த், 17 வயதுடைய கல்லூரி மாணவர் ஆகியோர் கோவிந்தன் வீட்டுக்கு சென்றார்கள்.
கொலை
அங்கு ஏற்பட்ட தகராறில் தமிழ்நிதி மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து அரிவாள், மண்வெட்டி மூலமாக கோவிந்தனை தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த் (22), அவருடைய தம்பியான 17 வயது கல்லூரி மாணவர் ஆகிய 2 பேரையும் 13-ந்தேதி கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிழ்நிதி, அவருடைய மனைவி சித்ரா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
கோர்ட்டில் சரண்
இந்தநிலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தமிழ்நிதி ஈரோடு முதலாம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மாலை சரண் அடைந்தார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தி சிறை காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சரண் அடைந்த தமிழ்நிதி சிறையில் அடைக்கப்பட்டார்.