சேலம் மாவட்டத்தில் பலத்த மழை: ஏற்காட்டில் அதிகபட்சமாக 42 மி.மீ. பதிவானது

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ஏற்காட்டில் அதிகபட்சமாக 42 மி.மீ. மழை பதிவானது.

Update: 2021-04-15 21:19 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ஏற்காட்டில் அதிகபட்சமாக 42 மி.மீ. மழை பதிவானது.
கோடை வெயில்
தமிழகம் முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதே போன்று சேலத்திலும் வெயில் கொடுமையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனிடையே சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெயில் 109 டிகிரி வரை பதிவானது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் பகலில் வெயில் கடுமையாக இருந்தது. பின்னர் அன்று நள்ளிரவு 2 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் சேலம் தமிழ்ச்சங்கம் ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் மழை நீர், சாக்கடை நீருடன் கலந்து சென்றது.
ஏற்காட்டில் 42 மி.மீ.
மழையின் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை சேலம் மாநகர் முழுவதும் குளிர்ச்சியுடன் காணப்பட்டது. இதே போன்று மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் எடப்பாடி, தேவூர் உள்பட பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதில் நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 42 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீ.) வருமாறு:-
கரியகோவில்-35, ஆணைமடுவு-27, காடையாம்பட்டி-19, தம்மம்பட்டி-15, சங்ககிரி-14.3, சேலம்-10.5, எடப்பாடி-9, மேட்டூர்-7.5, ஓமலூர்-7.4, ஆத்தூர்-6.4, பெத்தநாயக்கன்பாளையம்-4, வாழப்பாடி-3.  
சாரல் மழை
இந்த நிலையில் சேலம் மாநகர் பகுதியில் நேற்று காலை லேசாக வெயில் அடித்தது.  பின்னர் மாலை 5.30 மணி அளவில் திடீரென்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து இரவிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

மேலும் செய்திகள்