பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-04-15 21:07 GMT
விருதுநகர், 
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் பலியானார்.  3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பட்டாசு ஆலை
விருதுநகர் அருகே உள்ள சதானந்தபுரத்தில் தேசிங்குராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.
 இந்த ஆலை வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் உரிமம் பெற்றது. இங்கு நேற்று காலை வழக்கம்போல பட்டாசு தயாரிப்பு பணி தொடங்கியது. ஒரு அறையில் தொழிலாளர்கள் சரவெடியினை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெடி விபத்து 
 அப்போது உராய்வு ஏற்பட்டதால் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த ஆனையூரைச்சேர்ந்த ஆதிலட்சுமி (வயது 35), செந்தில் (35), முத்துமாரி (37), அய்யம்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் (40) ஆகிய 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு 70 முதல் 100 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மற்ற அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணியில் இருந்த தொழிலாளர்கள் வேகமாக வெளியேறினர். 
பெண் பலி 
இதுகுறித்து தகவல் அறிந்து சிவகாசி மற்றும் விருதுநகரிலிருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  காயம் அடைந்த 4 பேரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆதிலட்சுமி பலியானார். இந்த விபத்தில் அறைகள் எதுவும் சேதமடையவில்லை.
3 பேர் மீது வழக்கு  
வெடி விபத்து குறித்து வாடியூர் கிராம நிர்வாக அதிகாரி மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் தேசிங்கு ராஜா, போர்மேன் தங்கேஸ்வரன் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்