கும்பகோணத்தில் ரூ.10 லட்சம் கேட்டு லாரி உரிமையாளர் கடத்தல் மதுபான ஆலை முகவர் உள்பட 6 பேர் கைது
கும்பகோணத்தில், லாரி உரிமையாளரை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய மதுபான ஆலை முகவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்:-
கும்பகோணத்தில், லாரி உரிமையாளரை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய மதுபான ஆலை முகவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாரி உரிமையாளர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பசீர்அகமது(வயது 48). லாரி உரிமையாளரான இவர், சரக்கு ஏற்றும் லாரிகளை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சேகர்(45). இவர், மன்னார்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபான ஆலையில் இருந்து மதுபாட்டில்களை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு கொண்டு சென்று இறக்குமதி செய்யும் முகவராக இருந்து வருகிறார்.
மதுபாட்டில்கள் பதுக்கல்
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சேகர், மன்னார்குடியில் உள்ள மதுபான ஆலையில் இருந்து ராமநாதபுரத்துக்கு மதுபாட்டில்களை கொண்டு செல்ல வேண்டும் என கூறி பசீர்அகமதுவிடம் லாரியை வாடகைக்கு எடுத்தார்.
சேகர் வாடகைக்கு எடுத்த லாரியில், ராமநாதபுரத்துக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சேகருக்கு ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் சேதமாகாத மதுபாட்டில்களை பசீர்அகமது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அனைத்து மதுபாட்டில்களும் விபத்தில் சேதமடைந்து விட்டதாக பசீர் அகமது, சேகரிடம் கூறி உள்ளார்.
ரூ.10 லட்சம் கேட்டார்
இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நன்னிலம் போலீசார் பதுக்கி வைத்த இடத்துக்கு சென்று மதுபாட்டில்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக பசீர் அகமது உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு லாரி உரிமையாளர் பசீர் அகமது தான் காரணம் என கூறி சேகர், பசீர் அகமதுவிடம் கடந்த சில மாதங்களாக ரூ.10 லட்சம் கேட்டு வந்துள்ளார். ஆனால் பசீர் அகமது பணம் தரமுடியாது என கூறி உள்ளார்.
காரில் கடத்தல்
இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் தனது கூட்டாளிகளான திருவையாறை சேர்ந்த பரமேஸ்வரன்(37), மன்னார்குடியை சேர்ந்த சுவாமிநாதன்(42), கண்ணதாசன்(36), அப்துல்குத்தூஸ்(37), கவிதீபன்(24) ஆகியோருடன் சேர்ந்து கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்த பசீர் அகமதுவை சொகுசு காரில் கடத்தி சென்றார்.
மேலும் பசீர் அகமதுவின் மனைவி அஷ்மாபேகத்திடம் ரூ.10 லட்சம் கொடுத்தால் மட்டுமே பசீர் அகமதுவை உயிரோடு ஒப்படைப்போம், இல்லையென்றால் கொன்று விடுவோம் என கூறி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அஷ்மாபேகம் தனது வீட்டில் உள்ளவர்களிடம் மட்டும் சொல்லி கதறி அழுதுள்ளார்.
மீட்க திட்டம்
பின்னர் இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் அஷ்மா பேகம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பசீர் அகமதுவை பத்திரமாக மீட்க திட்டமிட்டனர். அதன்படி அஷ்மா பேகத்தை கடத்தல் கும்பலுடன் தொடர்ந்து பேச செய்தனர்.
போலீசார் கூறியபடி கடத்தல் கும்பலிடம் அஷ்மா பேகம், ‘தன்னிடம் பணம் இல்லை, பணத்தை உடனே ஏற்பாடு செய்ய முடியாது. ஆனால் பணத்துக்கான ஆவணங்களை கொடுத்து விடுகிறேன். எனது கணவரை ஒன்றும் செய்து விடாதீர்கள்’ என கெஞ்சுவது போல் பேசி உள்ளார்.
உறவினர்போல் மாறுவேடம்
இனிடையே தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் அடங்கிய 2 குழுவினர் நேற்று முன்தினம் இரவு பசீர் அகமதுவை கடத்தி வைத்திருந்த மன்னார்குடியை அடுத்த காரக்கோட்டை பகுதியை நெருங்கினர்.
ஒரு குழுவினர் பசீர் அகமதுவின் உறவினர்போல் மாறுவேடம் போட்டு அவரிடம் மனைவி கொடுத்ததாக கூறி சில ஆவணங்களை அளித்தனர். அப்போது மற்றொரு குழுவை சேர்ந்த போலீசார், கடத்தல் கும்பலை லாவகமாக சுற்றி வளைத்தனர். இதனால் போலீசாரிடம் இருந்து கடத்தல் கும்பலால் தப்பிச்செல்ல முடியவில்லை. அவர்கள் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த பசீர் அகமதுவை தனிப்படை போலீசார் மீட்டனர்.
6 பேர் கைது
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை சேர்ந்த சேகர் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். கைதான 6 பேருக்கும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கும்பகோணத்தில், ரூ.10 லட்சம் பணம் கேட்டு லாரி உரிமையாளர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.